search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெற்காசிய கிளை"

    தெற்காசிய நாடுகளில் தலைதூக்கி வருவதாக நம்பப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கிளைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று தடை விதித்துள்ளது.
    நியூயார்க்:

    மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப்படைகளை எதிர்த்து போர் புரிந்த அல்நுஸ்ரா முன்னணி என்கிற அமைப்பும், அல்கொய்தாவின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்கிற புதிய அமைப்பை உருவாக்கின.

    2013-ம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் வலுப்பெற்ற இந்த அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 2014-ம் ஆண்டு தொடக்கத்தில் ஈராக்கிற்குள் நுழைந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலுஜா, மொசூல் ஆகிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 30 ஆயிரம் வீரர்கள் அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.
     
    ஆனால் ஈராக், சிரியாவில் இதன் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இவர்கள் உலகம் முழுவதும் தங்கள் அமைப்பை ஏற்படுத்தும் ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    சமீபத்தில் நிகழ்ந்த இலங்கை பயங்கரவாதி தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இந்தியாவில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு மாநிலத்தையே நிறுவியுள்ளதாக ஐ.எஸ். அமைப்பினர் சமிபத்தில் தெரிவித்திருந்தனர். இது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தானில் கடந்த 2015-ம் ஆண்டில் தெஹ்ரிக்-இ-தலிபான் தலைவர் ஐ.எஸ்.ஐ.எஸ். நிறுவனரும் தலைவருமான அபுபக்கர் பக்தாதிக்கு செய்துதந்த சத்தியத்தின்படி, பின்னர் தலிபான் இயக்கங்களில் இருந்து பிரிந்துவந்த பயங்கரவாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதி ஹபீஸ் சையத் தலைமையில் தெற்காசியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை பரப்ப உறுதி ஏற்றதாக அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது.



    தெற்காசியாவில் உள்ள முக்கிய நாடுகளில் காலூன்ற நினைக்கும் இந்த அமைப்புக்கு ’ஐ.எஸ்.ஐ.எஸ். கோராசான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முஹம்மத் அமைப்பின் தலைவனான பயங்கரவாதி ஹபீஸ் சயீதை சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கடந்த முதல் தேதியன்று அறிவித்தது.

    இதைதொடர்ந்து, தெற்காசிய நாடுகளில் தலைதூக்கி வருவதாக நம்பப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கிளைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று தடை விதித்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களின் மூலம் சுமார் 150 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததால் இந்த அமைப்புக்கு சர்வதேச தடை விதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
    ×